செல்லப்பிராணிக்கு சீமந்தம்.. சீர்வரிசை வைத்து ஆடம்பரமாக கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்!
Published : Aug 30, 2023, 12:48 PM IST
திண்டுக்கல்:கொட்டப்பட்டியை சேர்ந்த ஜோதி என்பவர் பெங்காலி மார்க்கெட்டில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது வீட்டில் செல்லப்பிராணியாக ‘லிப்பிகா’ என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நாய் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறது. நாய் மீது வைத்து உள்ள அளவு கடந்த பாசத்தின் காரணமாக ஜோதி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி சீமந்த நிகழ்ச்சியான வளைகாப்பு நிகழ்ச்சியை மரபு மாறாமல் பாரம்பரிய முறைப்படி நாய்க்கு நடத்தி உள்ளனர்.
இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஏழு வகையான சாதங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகள், சிக்கன் போன்றவற்றை சீர்வரிசையாக நாய் லிப்பிகாவிற்கு வழங்கப்பட்டது. மேலும் வண்ண வண்ண வளையல்களை நாய் லிப்பிகாவிற்கு அணிவித்து சீமந்தம் செய்தனர். தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் வண்ண உடை அணிந்து லிப்பிகா பங்கேற்றது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.