வால்பாறை பகுதியில் தும்பிக்கை இல்லாமல் உலா வரும் யானை!
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தமிழ்நாடு - கேரளா எல்லை வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, யானை ஆகிய வனவிலங்குகள் அதிகளவில் aவசித்து வருகின்றன. இதனிடையே தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகக் காட்டு யானைக் கூட்டங்கள் நீர் நிலைகளைத் தேடி அலைந்து வருகின்றன.
எனவே தமிழ்நாடு வனத்துறை, கேரள வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் காட்டு யானைகள் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தும்பிக்கை இல்லாத ஒரு வயதான குட்டி யானை ஒன்று காட்டு யானைகள் கூட்டத்தில், தனது தாய் உடன் உலா வருகிறது.
இந்த ஒரு வயதான தும்பிக்கை இல்லாத குட்டி யானை அடங்கிய யானைக் கூட்டம் ஆற்றைக் கடக்கும்போது, அதனைப் பார்த்த பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “தும்பிக்கை இல்லாத ஒரு வயதே ஆன யானைக் குட்டி, யானை கூட்டத்துடன் உள்ளது. தும்பிக்கை இல்லாவிட்டாலும், யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதேநேரம் தும்பிக்கை இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடன் குட்டி யானை இருப்பது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.