ஒரு வார வளர்ப்பு பாசம்.. குட்டி யானையைப் பிரிந்த வன ஊழியர் கண்ணீர்!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கோடுபட்டி அருகே, கடந்த வாரம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த கிராம மக்கள், இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் குட்டி யானையை 30 அடி ஆழ விவசாயக் கிணற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் குட்டி யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப் பகுதியில் உள்ள கூட்டத்துடன் சேர்ப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு வந்தது. இதனிடையே காப்பாற்றப்பட்ட இந்த குட்டி யானையை மகேந்திரன் என்ற வன ஊழியர் ஒரு வாரமாக இளநீர், குளுக்கோஸ் போன்ற உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் யானைக் கூட்டம் கிடைக்காததால், முதுமலையில் உள்ள யானைப் பாகன் பொம்மனிடம் குட்டி யானையை வளர்ப்பதற்காக ஒப்படைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து முதுமலையில் இருந்து மருத்துவர், யானைப்பாகன் பொம்மன் உள்ளிட்ட வனத்துறையினர் ஒகேனக்கல் காட்டுப் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து குட்டி யானை, முதுமலை சரணாலயத்திற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது கடந்த ஒரு வார காலமாக குட்டி யானையைப் பராமரித்து வந்த வன ஊழியர் மகேந்திரன், குட்டி யானை தன்னை விட்டு பிரிவதை எண்ணி, அழுது கொண்டே வாகனத்தில் பயணம் செய்தார். இவ்வாறு வன ஊழியர் அழுவதைப் பார்த்த மருத்துவர், வன ஊழியரை வேறு வாகனத்திற்கு மாற்றினார்.