Baahubali elephant : கல்லூரிக்குள் புகுந்து பொம்மை யானையுடன் கலவரம் செய்த ’பாகுபலி’ யானை!
கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள ஓடந்துறை,சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. பாகுபலி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இதுவரை இந்த பாகுபலி யானை பொதுமக்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை. இருந்தாலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மட்டுமே தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினரும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) இரவு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய பாகுபலி யானை, கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரிந்தது. பின்னர், அங்குமிங்கும் உலாவிய காட்டு யானை, அங்கு இருந்த யானை சிலையினையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வனக்கல்லூரியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வனக்கல்லூரியில் நுழைந்த பாகுபலி யானை குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும. மேலாக போராடி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை உலாவுவதை அங்கிருந்தவர்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்து உள்ளனர்.