நத்தம் அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்!
Published : Jan 2, 2024, 7:06 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் 12ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் மண்டல பூஜை நேற்று (ஜன.1) நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் 'அய்யனார் தீர்த்தம்' அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இருமுடி கட்டி, இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐயப்ப ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதனை நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், கோயில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூக்குழியில், குருசாமி முதலில் பூக்குழி இறங்க 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் கோயில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.