ஈரோட்டில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சியின் மூலம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு! - Awareness on the effects of drugs
ஈரோடு:போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுக்கான ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக ‘ஃபன் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, போதை பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
ஈரோடு, பெரியார் நகர் 80 அடி சாலையில் நடத்தப்பட்டு வரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், பொது மக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், 80 அடி சாலையில் மேடை அமைக்கப்பட்டு திரைப்பட பாடல்களுக்கு வயது வித்தியசமின்றி ஆண், பெண் என இருபாலரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்று நடனமாடினர்.
மேலும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போதை பொருட்களுக்கு எதிராக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், காலையிலே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
இதில் சிலம்பம், கும்மி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தனர். சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களை தொடர்ந்து ஈரோட்டில் நடத்தப்பட்டது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.