மேடவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழை நீர்.. பள்ளம் இருப்பது தெரியாமல் கவிழ்ந்த ஆட்டோ! - auto overturned and fell on the road due to rain
Published : Dec 1, 2023, 10:24 AM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பரவலாக மழை பொழிந்து வருவதால், பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில், மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்து விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேடவாக்கம், விஜிபி பாபுநகர் பகுதியில் கன மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேக்கம் காரணமாக சாலையில் இருக்கும் மேடு பள்ளம் தெரியவில்லை. இந்நிலையில், அவ்வழியே பூண்டு வியாபாரி ஒருவர், மூன்று சக்கர ஆட்டோவில், விற்பனைக்காக பூண்டு பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த நிலையில், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக ஆட்டோ மழை நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் ஏற்றி வந்த பூண்டு பெட்டிகள் மழை நீரில் கொட்டி சேதமடைந்தன.
இதில், கீழே விழந்த வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை மீட்க உதவி செய்தனர். அதே போல், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும், பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்தனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.