CCTV: கணவர் ஓட்டிய ஆட்டோ கவிழ்ந்து மனைவி உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் - சாலை போடும் பணி
மதுரை: காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஆறுமுகம். இவர் கே.கே. நகர் சுந்தரம் பார்க் அருகே தனது ஷேர் ஆட்டோவில் அவரது மனைவி மீனாவை ஏற்றிக்கொண்டு சொந்த வேலையாக சென்றுள்ளார். அந்தப் பகுதியிலுள்ள சாலையின் ஒரு புறம் சாலை போடும் பணி நடைபெறுவதால், மற்றொரு வழியாகவே அனைத்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்எதிர் திசைகளில் வாகனங்கள் ஒரே பகுதியில் சென்று வருகின்றன.
அப்போது சுந்தரம் பார்க் பகுதியில் இருந்து ஆறுமுகம் ஓட்டிச் சென்ற ஷேர் ஆட்டோவின் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியுள்ளார். அச்சமயம், எதிர் திசையில் வந்த டூவீலர் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த ஆட்டோவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மனைவி மீனா மீது ஆட்டோ கவிழ்ந்ததில் சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது குறித்து மீனாவின் மகன் சுப்பிரமணி கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியுடன் ஷேர் ஆட்டோவில் சென்றபோது, விபத்துக்குள்ளாகி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.