தமிழ்நாடு

tamil nadu

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

ETV Bharat / videos

Audio Leak: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை; சரக்கு கேட்ட கயத்தாறு காவலர்

By

Published : Jul 7, 2023, 1:36 PM IST

தூத்துக்குடி:கயத்தாறு அருகே உள்ள பணிக்கர் குளத்தில் 2020ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, பூல்பாண்டி ஆகியோர் நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி வந்துள்ளார். அப்போது ராமசாமி நடுரோட்டில் அமர்ந்திருந்தவர்களிடம் வழி விடுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் மது போதையில் இருந்த மூன்று நபர்களுக்கும் ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பூல்பாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமசாமியின் முதுகில் வெட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட ராமசாமி பூல்பாண்டி வைத்திருந்த அரிவாளை மடக்கிப் பிடித்து பூல்பாண்டியை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூல்பாண்டி உயிர் இழந்தார்.

இந்த கொலை வழக்கு தூத்துக்குடி கூடுதல் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கயத்தார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணிகளை நீதிமன்ற காவலர் ஷேக் ஹயாத் கவனித்து வருகிறார். இதில் பூல்பாண்டியின் வழக்கு வருகிற 27ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

இக்கொலை வழக்கிற்கான சாட்சிகள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய மணிகண்டனிடம், காவலர் ஷேக் ஹயாத் செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு 'நான் எதற்கு உங்களுக்கு மது வாங்கித் தர வேண்டும்; எங்க சாதியில எல்லாம் நாங்க வாங்கி கொடுக்க மாட்டோம். நீங்கள் எனக்கு யார்' என மணிகண்டன் கேட்டுள்ளார்.

'உன் வழக்கை நான் தான் பார்த்து வருகிறேன், அதற்கு நீ மது வாங்கித் தர வேண்டும்’ என காவலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மது வாங்கித்தர மறுக்கவே, 'நான் யார் என்பதை வரும் 27ஆம் தேதி சாட்சி கூண்டில் சாட்சிகள் ஏறும் போது உனக்கு தெரியப்படுத்துவேன்' என காவலர் கூற, அதற்கு மணிகண்டன் உன்னால் முடிந்ததை செய்து கொள்ள கூறவே போனை துண்டித்துள்ளார்.

மீண்டும் காவலர் மணிகண்டனுக்கு போன் செய்து, 'தம்பி பழக்கத்தினால் தான் உன்னிடம் மது கேட்டேன். மன்னித்துக்கொள். உன் வேலையை நீ பார். என் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். இதை பெரிதாக்க வேண்டாம்’ எனக் கூறும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details