கஞ்சா போதையில் ரகளை: வடபழனி அருகே டாஸ்மாக் மூடியதற்கு எதிர்ப்பு! - சென்னை செய்திகள்
சென்னையில் உள்ள வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அனைத்து பார்களும் மூடப்பட்ட நிலையில், இக்கடையில் செயல்பட்டு வந்த பாரும் மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் கடை அருகே உள்ள வீட்டு வாசல் மற்றும் சாலையில் அமர்ந்து மது அருந்துவதுடன் பாட்டில் மற்றும் குப்பைகளை அங்கேயே வீசி விட்டுச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சிலர் நேற்று மதியம் திடீரென டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலையில் மது அருந்துவோரை அகற்றுமாறும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த வடபழனி போலீசார் டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தியவர்களை விரட்டி உள்ளனர்.
அப்போது அந்த பாரில் வேலை செய்து வந்த பிரசாத் என்பவர் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதுடன், பார் மூடியதால்தான் அனைவரும் சாலையில் அமர்ந்து மது அருந்துவதாகவும், உடனே பாரை திறக்க வேண்டும் என கோஷமிட்டதுடன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டு உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பிரசாத்தை பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.