தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா: மாதுளை முத்துக்கள் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன்! - தஞ்சாவூர் மாவட்ட செய்தி
தஞ்சாவூர்பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா கடந்த ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் சிறப்பாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இந்த விழாவின் ஆறாம் நாளாக நேற்று (ஜூன் 23) மஹா வாராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சியாக பெங்களூரு ஸ்ரீமதி சுமா சுதீந்ரா ஆகியோரின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.