திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப மை சாமிக்கு சாற்றப்பட்டு ஆருத்ரா தரிசனம்! - தீபத்திருவிழா
Published : Dec 27, 2023, 7:15 PM IST
திருவண்ணாமலை: ஆன்மீக மாதம் என்று கூறுப்படும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கால் மண்டபத்தில் இன்று (டிச.27) நடைபெற்றது. நேற்று (டிச.26) இரவு கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராசர் எழுந்தருளினார்.
இன்று காலை சிவகாம சுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி வரை 11 நாட்கள் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து தீப மை கொண்டு வரப்பட்டு, அதற்கு கோயிலின் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆருத்ரா தரிசனமான இன்று, சிவகாம சுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு தீபமை நெற்றியில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிவகாம சுந்தரி சமேத நடராசப் பெருமான் ஊர்வலமாக புறப்பட்டு, திருமஞ்சன கோபுர (தெற்கு) வாயில் வழியாக, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
குறிப்பாக, ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமஞ்சன கோபுர (தெற்கு) வாயில் வழியாக நடராசப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீப மை இன்று முதல் பிரசாதமாக வழங்கப்படும்.