ஆருத்ரா தரிசனம்:கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்! - நடராஜர் சிலை
Published : Dec 27, 2023, 9:12 AM IST
தஞ்சாவூர்:ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஆண்டிற்கு ஆறு முறை மட்டும் அபிஷேகம் காணும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில், நடராஜபெருமானுக்கு நேற்று (டிச.26) இரவு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், மகாமகம் தொடர்புடைய 12 சைவத்திருத்தலங்களில் முதன்மையான தலமாக போற்றி வணங்கப்படும், பல்வேறு சிறப்புகள் பெற்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி ஆலயத்தில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று இரவு சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு, திரவிய பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, பால், தேன், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 36 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கட அபிஷேகமும் நடைபெற்ற பிறகு சிறப்பு அலங்காரத்தில் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று (டிச.27) காலை, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமான், சிறப்பு மலர் அலங்காரத்தில், பொது மக்களுக்கு அருள்காட்சி கண்டருள்வார்.
ஆண்டுதோறும் நடராஜபெருமானுக்கு, சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் மாலை வேளையிலும், ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் விடியற்காலை வேளையிலும், ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்தசி திதி நன்னாள் மாலை வேளையிலும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்தசி திதி நாளின் மாலை வேளையிலும், மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளின் அதிகாலை வேளையிலும், நிறைவாக மாசி மாதம் பூர்வபட்ச சதுர்தசி நாளின் மாலை வேளை என ஆறு முறை மட்டும் அபிஷேகம் கண்டருள்வார் என்பது குறிப்பிடதக்கது.