கள்ளச்சாராயம் விற்றால் கைது... ஊராட்சி மன்ற தலைவி ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை!
சேந்தனூர்:விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சையில் உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை இரண்டு முறை அளிக்கப்பட்டும் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலருக்கு உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் யாரும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்துமாறு, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் சேந்தனூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவி சுதா, ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார். விஷச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். மக்களின் உயிருக்கு தீங்கை ஏற்படுத்தும் போதைப் பொருள் விற்பனையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை.. காவலர் கைது.. சிக்கியது எப்படி?