ஆக்ரோஷமான அரிக்கொம்பன்...குளிர்வித்த தீயணைப்பு துறையினர்... - களக்காடு
தூத்துக்குடி:தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வாரம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். கேரள மாநிலம் மூணாறு பகுதியிலிருந்து தேனி கம்பம் பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் காட்டு யானை அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இது மட்டுமின்றி ஆக்ரோசமான அரிக்கொம்பன் யானை பத்திற்கும் மேற்ப்பட்டோரை கொன்றது. இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக முயற்சி செய்த நிலையில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையிடம் பிடிபட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அரிக்கொம்பன் யானை திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனப் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் இன்று காலை தேனியில் இருந்து புறப்பட்ட அரிக்கொம்பன் யானை விருதுநகர் வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிக்கு வரும் போது வெயிலின் தாக்கத்திலிருந்து வெப்பத்தை தணிப்பதற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அரிக்கொம்பன் யானையை குளிர்வித்தனர்.
மயக்க நிலையில் இருந்தாலும் சற்று ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் பயத்துடனே தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தனர். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் அரிக்கொம்பன் இருந்த லாரி திருநெல்வேலி நோக்கி புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க:Arikomban elephant:'அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்படும்' - உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்