ஆட்டம் காட்டும் அரி கொம்பன் யானை..! சுருளி வனப்பகுதியில் சுற்றி வளைக்க காத்திருக்கும் கும்கி யானைகள்..
Ari Komban Elephant: தேனி:கம்பம் நகர் பகுதிக்குள் நேற்று காலை திடீரென புகுந்த அரி கொம்பன் வாகனங்கள் சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. எனவே, கம்பம் பகுதியில் அரி கொம்பன் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கம்பம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அரி கொம்பன் தஞ்சம் அடைந்திருந்தது. இந்த நிலையில், அங்கிருந்து கூடலூர் சாலை பகுதிக்கு சென்றது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர் யானையைப் பின் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 28) அதிகாலை அரி கொம்பன் யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டிக்கு நுழைந்தது. சுருளிப்பட்டி ஊருக்குள் வராமல் வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதிக்குள் யானை தஞ்சம் அடைந்துள்ளது. இதனால், சுருளி அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், பொள்ளாச்சி பகுதியில் இருந்து பிரத்யேக வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் தயார் நிலையில் கம்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதிக்குள் தொடர்ந்து தஞ்சம் அடைந்துள்ள அரி கொம்பன் மீண்டும் நகர் பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரி கொம்பன் யானையின் நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால், கம்பம் மற்றும் சுருளிப்பட்டி பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.