“தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்களின் உரிமை பாதுகாக்கப்படுகிறது” - பேராயா் சந்திரசேகரன்! - Archbishop Chandrasekaran
Published : Oct 27, 2023, 9:45 AM IST
சேலம்:தென்னிந்திய திருச்சபை ஈரோடு, சேலம் திருமண்டலம் பேரவை கூட்டம், கோட்டை மைதானம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ அரங்கில் நேற்று (அக்.26) நடைபெற்றது. இதில், பொறுப்பு பேராயர் பிரதிநிதி சந்திரசேகரன் தலைமை வகித்து நிர்வாகிகளை ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுத்தனா்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொறுப்பு பேராயர் பிரதிநிதி சந்திரசேகரன்,“ உலக அளவில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகவே, நம்முடைய நாடு அமைதியான வழிமுறை கொண்ட நாடு. இதில் சாதி, மதம் எந்த ஒரு பிரிவினையும் இருக்கக் கூடாது. அனைத்து மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
உலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் நிறுத்தப்பட்டு, இந்தியாவைப் போல அந்த நாடுகளும் அமைதியான முறையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் மக்களின் உரிமை பாதுகாக்கப்படுகிறது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேராயா் லிவிங்ஸ்டன் பேசியதாவது, “சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய பரந்த நிலப்பரப்பு. நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து உள்ளோம். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, ஒரு திருமண்டலம் ஆகும். ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதி இரண்டாவது திருமண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து மாதங்களாக இந்த முறையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. பிரதமர் பேராயர் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில், முதலாவது பேரவை கூடி நிர்வாகிகளை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வதற்காக இந்த பேரவை கூட்டம் நடைபெற்றது” என்று கூறினார்.