வேலூர் மாவட்ட திட்ட அலுவலரின் தருமபுரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை! - தர்மபுரி மாவட்ட செய்தி
தர்மபுரிமாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர், ஆனந்த் மூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி. இவர் தர்மபுரி மாவட்ட மகளிர் திட்ட அலுவலராகவும், மாவட்ட திட்ட அலுவலராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்ட திட்ட அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் வருமானத்தை மீறி, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் தர்மபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மூன்று மணி நேர சோதனையில் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காததால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை கைவிட்டுவிட்டு திரும்பினார்கள்.
இதையும் படிங்க: பசியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்த தர்மபுரி எம்எல்ஏ!