திருவல்லிக்கேணியை தொடர்ந்து ஆவடியில் அடுத்தொரு பசு மாடு தாக்குதல்.. கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை துரத்திய வீடியோ! - cow issue in avadi
Published : Oct 26, 2023, 10:35 PM IST
|Updated : Oct 26, 2023, 10:41 PM IST
சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் சோரஞ்சேரி கிராமத்தில் பூந்தமல்லி பார்ம்ஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில் சோராஞ்சேரி கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அவரவர் வீட்டில் பரவலாக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் அவர்கள் வளர்க்கும் மாடுகளை முறையாகக் கட்டி பராமரிக்காமல் தெருக்களில் விடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பூந்தமல்லி பார்ம்ஸ் குடியிருப்பு பகுதியில் பசுமாடு ஒன்று நுழைந்தது. அப்போது அந்தப் பகுதியில் பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அந்த பெண்ணை, மாடு முட்டியது. தடுக்க முயன்ற போதும் விடாமல் அப்பெண்ணை முட்டி துரத்திச் சென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட அந்தப்பெண் கைக்குழந்தையுடன் அருகிலிருந்த மற்றொரு வீட்டிற்குள் புகுந்தார். அதன் பின் மாடு அங்கிருந்து சென்றது.
கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரை மாடு முட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக திருவல்லிக்கேணி பகுதியில் சுந்தரம், கஸ்தூரி ரங்கன் ஆகியோர் அடுத்தடுத்து பசுமாடுகளால் முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது பட்டாபிராமில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.