Valeeswarar temple Annabhishekam: பெரம்பலூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் ஆயிரம் கிலோவில் அன்னாபிஷேகம்! - today latest news
Published : Oct 29, 2023, 9:13 AM IST
பெரம்பலூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் 1,008 கிலோவில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ளது, வாலீஸ்வரர் திருக்கோயில். வானர அரசரான வாலி, இந்த ஊரில் உள்ள ஈசனைப் பூஜித்து வழிபட்டதால் இந்த ஊர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுவதாக இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த கோயில் பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளங்களில் முதன்மையான ஒன்றாகும். இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியான நேற்று (அக்.28) இந்த கோயிலில் உள்ள வாலீஸ்வரருக்கு 1,008 கிலோ அரிசியால் சாப்பாடு செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில், வாலிகண்டபுரம் மட்டும் அல்லாது மேட்டுப்பாளையம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.