ஐப்பசி மாத பௌர்ணமி; தஞ்சையில் சிவலிங்க திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம்!
Published : Oct 28, 2023, 12:37 PM IST
தஞ்சாவூர்:12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழாவில் உலககெங்கிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம். இப்புனித குளத்தின் உள்ளே கங்கா, யமுனை, கோதாவரி, சரஸ்வதி என 20 வகையான புனித தீர்த்தக் கிணறுகள் உள்ளன.
மேலும் மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்ததேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர் உள்ளிட்ட 16 வகையான சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன.
இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என குறிப்பிடுவது வழக்கம். அபிஷேகப்பிரியராக கருதப்படும் சிவனுக்கு, ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது விசேஷமாக கூறப்படுகிறது. அதுபோலவே, ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சிறப்பு பெற்ற சோடஷ மகாலிங்க சுவாமிகள் 16-க்கும், இன்று ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி எண்ணெய், மாவுப்பொடி, மஞ்சள், பால், இளநீர், தேன், சந்தனம் என பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தயிருடன் கலந்த அன்னத்தைக் கொண்டு சிவலிங்க மேனியில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க திருமேனிக்கு கண், புருவம், மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் வெட்டப்பட்ட வண்ண காகிதங்களைக் கொண்டு அன்னத்தில் ஒட்டி அழகாக அலங்கரித்து, பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இத்தகைய அன்னாபிஷேக சிவலிங்கங்களை தரிசிப்பது என்பது பல கோடி சிவலிங்கங்களை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும் என்பது இறைநம்பிக்கையாகும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அன்ன அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சிவலிங்க திருமேனிகளை தரிசித்தனர்.