மேக்னா தெரிஞ்சுருக்கலாம்...மக்னா தெரியுமா..?
தருமபுரியில் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்த மக்னா யானை ஒன்று கடந்த 5ஆம் தேதி பிடிக்கப்பட்டு ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஆத்து பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு வழியாக 140 கிலோமீட்டர் தூரம் நடந்தே மதுக்கரைக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து குனியமுத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. கோவை மாநகராட்சிக்குள் மக்னா யானை நுழைந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணித்தனர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
நகர்பகுதிக்குள் உலா வந்து 2 நாட்களாக பரபரப்பை கிளப்பிய மக்னா யானையை வனத்துறையினர் வெற்றிகரமாக பிடித்தாலும், மக்னா என்றால் என்ன..? அந்த யானை ஏன் மக்னா யானை என்றழைக்கப்பட்டது என பொதுமக்களுக்கு கேள்வி எழும்பியது. இதுகுறித்து கோவை வனவிலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான முருகானந்தம் விளக்கியுள்ளார்.
”மக்னா யானை என்பது தந்தம் இல்லாத ஆண் யானை ஆகும். இது இனச்சேர்க்கைக்கான சண்டையில் பிற ஆண் யானைகளிடம் தோற்றதால் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும். மற்ற யானைகளை விட மக்னா யானைகள் அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும். இந்த மக்னா யானை போதுமான உணவு, தூக்கம் இன்றி தவித்ததால் ஆக்ரோஷமாக காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.