மரக்கிளையால் அங்கன்வாடி மையத்திற்கு ஆபத்து! அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்ற கோரிக்கை! - கொளகம்பட்டியில்
தருமபுரி: அரூர் அடுத்த கொளகம்பட்டியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்திற்கு அருகில் இருந்த புளியமரத்தின் ஒரு பகுதி முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டது.
மேலும் மீதம் இரண்டு கிளைகள் இருந்துள்ளன. அந்த இரண்டு கிளைகளும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையின் மீது சாய்ந்த நிலையில் இருந்துள்ளன. அதில் ஒரு கிளையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவில் காற்று வீசுகின்ற சமயம் கிளை முறிந்து, அங்கன்வாடி மையத்தின் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புளியமரம் கீழே விழுந்தால் அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களுக்கு, பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையத்தின் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள புளியமரத்தினை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.