யாசகம் செய்து பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த முதியவர்! - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு வயது 72. 40 வருடங்களுக்கு முன்னதாக பிழைப்புத் தேடி குடும்பத்துடன் மும்பைக்குச் சென்றிருந்தார், பாண்டி. அங்கு சலவைத் தொழில் செய்து தனது பிள்ளைகளை வளர்த்தார்.
இதனிடையே இவரது மனைவி சரஸ்வதி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்தார். அதன் பின் ஒரு கட்டத்தில் இவரை ஆதரிப்பவர்கள் யாரும் இன்றி மனம்போன போக்கில் சுற்றித்திரிந்தவர், தமிழகத்திற்கே திரும்பி வந்தார்.
தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி யாசகம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். யாசகம் பெற்ற பணத்திலும் தனது தேவைகள் போக மீதி உள்ள பணத்தை, பொது காரியங்களுக்கு பாண்டி செலவிட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தான் யாசகம் பெற்று சேமித்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக பாண்டி அளித்தார்.
இன்று காஞ்சிபுரம் வந்த முதியவர் பாண்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வங்கியில் செலுத்தி, அந்த ரசீதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து ஆச்சரியப்படுத்தினார். முதியவர் ஒருவர், தன் தேவை போக மீதமுள்ள பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
முதியவர் பாண்டியின் முன்னுதாரணமான செயலைப் பாராட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முதியவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.