தென்காசியில் கழுத்தில் பாம்புடன் டீ குடிக்க வந்த ஸ்நேக் பாபு! - தென்காசி செய்திகள்
தென்காசி : கழுத்தில் பாம்பைத் தொங்கவிட்ட படி டீ கடையில் முதியவர் ஒருவர் தேநீர் அருந்தும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த பகுதி பிரானூர் பார்டர். தமிழக கேரளா எல்லை என்பதால் இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும்.
மொழி பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குச் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் இந்த ஊரில் வாகனங்களை நிறுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர். அதனாலே இந்த பகுதியில் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
அந்த வகையில் பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள டீக் கடையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பொது மக்கள் தேநீர் வாங்கி பருகிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த கடைக்கு வந்த முதியவரைக் கண்ட பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். காரணம் கழுத்தில் ஐந்து அடிக்கும் நீளமான பாம்புடன் முதியவர் தேநீர் அருந்த வந்தது தான்.
கழுத்தில் பாம்புடன் முதியவரைக் கண்ட சிலர் அப்படியே மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருந்தனர். பாம்புடன் முதியவர் தேநீர் அருந்துவதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதில் முதியவரிடம் இது என்ன பாம்பு என ஒருவர் கேட்க அதற்கு முதியவர் நல்ல பாம்பு என கூலாக கூறி விட்டு தேநீர் அருந்துகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.