எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் ரியாக்ஷன் என்ன? - AIADMK
Published : Oct 20, 2023, 10:08 PM IST
கோயம்புத்தூர்: அமமுக சார்பில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கோவை வந்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமமுக அழிந்து விடும் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "வினாசகாலே விபரீதபுத்தி என்பார்கள். அழியப் போகின்றவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து அப்படிப் பேசுவார்கள். துரியோதனன் கூட்டம் எப்போதும் ஜெயித்தது கிடையாது, அவர்கள் (அதிமுக) வீழ்வது உறுதி" என்று பதில் அளித்தார். பின்னர் அதிமுகவினர் அனைவரும்a ஒன்றிணைக்கப் படுவார்கள் என்று சசிகலா கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அக்கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், " எந்த காரணத்தைக் கொண்டும் பழனிசாமியுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது என்றும், கட்சியின் நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்பதாகவும் கூறினார்.