பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மணலூர் மாரியம்மன் சைக்கிளில் பயணம்; பக்தியிலும் பகடி!
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரிக்காக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் பல சிலைகள் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மற்றும் பல்லக்கில் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவில் அமைந்துள்ள மணலூர் மாரியம்மன் கோயில் அம்மன், முதலில் மாட்டு வண்டியில் அலங்கரித்து எடுத்து வரப்பட்டுள்ளது. பின்னர் மாட்டு வண்டியில் இருந்த சுவாமி சிலையை சைக்கிள் மீது அமர வைத்து எடுத்து வரப்பட்டது. மேலும் அந்த சைக்கிளில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அம்மன் சைக்கிள் ஊர்வலம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து இதே சுவாமி சிலை தேவனாம்பட்டினத்தைச் சென்றடைந்தது. அப்போது ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அம்மன் சைக்கிளில் பயணம்’ என அந்த வாசகம் மாற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு லட்சக்கணக்கான வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி, தீர்த்தவாரிக்காக கொண்டு வரப்பட்டது.
அதேபோல் மஞ்சள் பாக்கெட்டுகள், குங்கும பாக்கெட்டுகள், ஊதுவத்தி மற்றும் சந்தன பாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள், வீணையுடன் அமர்ந்திருந்த அம்மனுக்கு விசிறி கொண்டு ஒருவர் வீசுவது போன்றான சுவாமி சிலை ஆகியவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.