Ambur: சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்! - battery bike suddenly caught fire
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீட்டில் நிறுத்தி சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ஜீவன் க்யூட் என்னும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மூலம் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மளிகைப்பொருட்களை கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் மளிகைப்பொருட்களை விற்பனை செய்து முடித்து விட்டு சசிகுமார் வீட்டில் தன்னுடைய எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் செய்தபோது, மின்கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் பைக்கிலிருந்து புகை வந்துள்ளது. இதையறிந்த சசிகுமார் மின் இணைப்பைத் துண்டிப்பதற்குள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்த மின் இணைப்பைத் துண்டித்து தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்கை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் எலக்ட்ரிக் பைக் விற்பனையாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.