உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்… 2 லட்சத்தை ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம்!! - திருப்பூர் மாவட்ட செய்தி
Published : Oct 5, 2023, 5:54 PM IST
திருப்பூர்: ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இவர் இன்று கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் 108 ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் பேருந்தின் பக்கவாட்டில் உரசி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்திருந்து சாலையில் கிடந்தார்.
அவரை செந்தில்குமார் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது அவர் கொண்டு சென்ற பையில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதனை பாதுகாப்பாக வைத்து விபத்தில் காயமடைந்த நல்லசாமி என்பவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து செந்தில்குமார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நல்லசாமி என்பதும், இரும்பு வியாபாரம் செய்து வருவதும், அதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு செல்லும் போது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நல்லசாமியை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில்குமாரை நல்லசாமியின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.