பொங்கல் பண்டிகைக்கு பொருள் வாங்க குவிந்த மக்கள்.. நடுரோட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ்! - கும்பகோணம் செய்திகள்
Published : Jan 14, 2024, 7:05 PM IST
தஞ்சாவூர்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பொங்கலை முன்னிட்டு பல்வேறு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் மக்கள் குவிந்ததால், இன்று கும்பகோணம் - பாலக்கரை சந்திப்பில் நீண்ட நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் இன்று நண்பகல் நீண்ட நேரத்திற்கு போக்குவரத்து தடைபட்டு, சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாங்களாகவே முன்வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் 108 அவரச கால வாகனம் ஒன்று அவ்வழியே வந்து சிக்கி இருந்த நிலையில், மாற்று வழியான சென்னை சாலையில் அதனை திரும்பி விட்டனர். பின்னர், நீண்ட நேரத்திற்குப் பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.