அம்பத்தூர் ஏரிக்கரையில் அரிப்பு.. பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்! - அம்பத்தூர்
Published : Dec 4, 2023, 8:46 PM IST
சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக, சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில்500 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் ஏரிக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் கிழக்குப் பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு ஏரிக் கரையில் அரிப்பு ஏற்பட்டு பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏரி பலவீனமடைந்த பகுதியில் சுமார் 17,000 குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர், அம்பத்தூர் சரக உதவியாளர் கிரி, ஆய்வாளர் டில்லி பாபு உள்ளிட்ட காவல்துறையினர் ஏரியை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறுமாறும், ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
அம்பத்தூர் ஏரி அமைந்துள்ள எதிர்நீர் புறத்தில் அம்பத்தூர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குன்னூர் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் உணவு பாதுகாப்பு பாதுகாப்பு விநியோகம் அலுவலகமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.