Students admitted in hospital due to allergy: ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - திருப்பத்தூர் ஆட்சியர் விளக்கம் - Tirupathur district
Published : Aug 24, 2023, 5:11 PM IST
திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் அலர்ஜி மற்றும் வாந்தி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு திடீரென அலர்ஜி போன்று ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி முழுவதும் பயிலும் சில மாணவர்களுக்கு உடனடியாக கை, கால், உதடு, முகம் மற்றும் உடல் முழுவதும் அரிப்பு போன்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட 33 மாணவர்களை அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மாணவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுவருகிறது. அவர்களிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் சிலர், மருத்துவமனை வளாகத்தில் வாந்தி எடுத்த நிலையில் 7 மாணவ மாணவியர்கள் மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களை பெற்றோர்கள் உடனடியாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, “மின்னூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திடீரென உடல் முழுவதும் அலர்ஜி போன்று ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் உடல் நிலை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு பூஞ்சைகளால் அலர்ஜி ஏற்பட்டதா அல்லது பூச்சிகள் மற்றும் காற்றின் மூலம் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருதாகவும் அவர் கூறினார். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.