நாங்களும் மனுஷங்க தானா....வேதனையில் மக்கள்: புழு பூச்சியுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம்! - ration shop
திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் தேவலாபுரம் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நியாயக விலைக் கடையின் மீது தொடர்ந்து மக்கள் பல குற்றங்களை முன்வைத்து வருகின்றனர். சரிவர ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் ரேஷன் பொருட்களை வழங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள் பொதுமக்களை பல நாட்கள் அலைக்கழிக்க வைத்து புழு, பூச்சி விழுந்த அரிசியை வழங்குவதாகவும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டை அடுக்குகின்றனர்.
மேலும் பொதுமக்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் ஒருமையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேவலாபுரம் பொதுமக்கள் தேவலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, “தேவலாபுரம் நியாய விலைக் கடை முறையாக செயல் படுவதில்லை என்றும் ஊழியர்கள் ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர்.
இது மட்டுமின்றி எந்த நேரம் கேட்டாலும் ஏதேனும் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதாகவே பதிலளிக்கின்றனர். கடும் வெயில் என்றும் பாராமல் பல மணிநேரத்திற்கும் ரேஷன் பொருட்களை கொடுக்காமல் கடும் வெயிலில் அவதிக்குள்ளாக்கின்றனர். இதனை எதிர்த்து கேட்டால் ஊழியர்கள் மக்களை ஒருமையில் பேசுவதாகவும் மரியாதைக் குறைவாகவாகவும் நடத்துகின்றனர்.
புழு, பூச்சி கொண்ட சீரற்ற பொருட்களை மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் நியாய விலைக் கடையின் விநியோக நேரத்தை உயர்த்தவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரேஷன் பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படும் என உறுதியளித்ததனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:புது ரூட்டில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மருமகள்.. போலீசில் சிக்கியது எப்படி?