'கூண்டோடு கோவிந்தா' - ஊரையே காலி செய்து விட்டு, திருப்பதிக்குச் சென்ற போச்சம்பள்ளி கிராம மக்கள் - Krishnagiri news
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மோட்டுப் பட்டி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்று, ஸ்வாமியை தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மோட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் திருப்பதி செல்ல ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் துணி கட்டிய உண்டியலை வைத்து, சிறுக, சிறுக பணம் சேர்க்கின்றனர்.
3 ஆண்டுகள் ஆன பிறகு திருப்பதி செல்ல, புனித செலவுகளுக்காக சேமித்து வைத்த காணிக்கைத் தொகையை எடுத்துக்கொண்டு, நேற்று இரவு திருப்பதிக்குச் சென்று உள்ளனர். ஏழுமலையானை தரிசனம் செய்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இந்தாண்டு, கிராம மக்கள் திருப்பதி செல்லும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதற்காக 5 பஸ்கள், 12 கார்கள் மூலம் கிராம மக்கள் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியின் பாதுகாப்புக் கருதி பாரூர் காவல் நிலையப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.