Vaniyambadi:கொலை வழக்கு; போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய திமுக பிரமுகர்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் தேடி வந்த ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவரின் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது, போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் (Vaniyambadi farmer Ramamurthy murder case) கடந்த ஆண்டு (12.12.2022) நிலத்தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர், 17 வயது சிறுவன் மற்றும் 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் 2 பேர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
மேலும், இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு முன் ஜாமீன் பெறாமல் இருந்த ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவர் சங்கீதாவின் கணவரும் திமுக பிரமுகருமான பாரி என்பவரை, ஆலங்காயம் காவல்துறையினர் இன்று (ஜூன் 27) கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பாரி, காவல்துறையினரின் வாகனத்தில் ஏறாமல் அவரது வாகனத்திலேயே வருவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோட்டம்: இதனைத்தொடர்ந்து இரண்டு காவலர்கள் பாரியின் காரில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி அழைத்து வந்தபோது ஆலங்காயம் - வாணியம்பாடி சாலையில் செக்குமேடு என்ற பகுதியில் வந்தபோது, திருப்பத்தூர் திமுக மாவட்டச் செயலாளரும் ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜிடம் கூறிவிட்டு வருவதாகக் கூறி, காரை நிறுத்தி விட்டு, சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் செல்லாமல், அங்கிருந்து நிலப்பகுதிகளின் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.
போலீசார் வலைவீச்சு: இதனைத்தொடர்ந்து ஆலங்காயம் காவல்துறையினர் தப்பியோடிய பாரியை பல்வேறு இடங்களில் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், இக்கொலை வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்சென்ற திமுக பிரமுகரும் ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவரின் கணவர் காவல்துறையினரை ஏமாற்றி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.