திருச்சியில் கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே - Trichy cricket academy
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று (மார்ச் 8) திருச்சியில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அகாடமி திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அஜிங்கியா ரகானே, “சிறிய ஊர்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்குவதால், இந்தியாவிற்கு சிறந்த வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த விளையாட்டாக இருந்தாலும், அதனை விரும்பி விளையாட வேண்டும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதே மனைவி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது. நடப்பு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெற்றி பெறும். இந்தியாவில் நல்ல மைதானங்கள், உள்கட்டமைப்புகள் இருந்தால் சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். வீரர்களுக்கு உடல் நலத்துடன் மன உறுதியும் வேண்டும். முதலில் இந்தியாவுக்கு விளையாட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும்” எனத் தெரிவித்தார்.