25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்கள் குடும்பத்துடன் சந்திப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார் குப்பம் பகுதியில் கிருபாணந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1996 - 1998ஆம் ஆண்டு கலை மற்றும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் படித்த 75 முன்னாள் மாணவர்களுக்கு மலரும் நினைவுகள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளியில் நடைபெற்ற மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கால் நூற்றாண்டுக்குப் பிறகு படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்க பள்ளி நாட்களின் அனுபவங்கள், குடும்ப வாழ்க்கை குறித்து மனம் விட்டு பேசி செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் குடும்பமாக கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் அழகூட்டியது.
அது மட்டுமல்லாமல், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் பயன்படுத்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெட்டி வழங்கப்பட்டது. இதனையடுத்து, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அசைவ விருந்து சாப்பிட்டு மன மகிழ்ச்சியோடு விடை பெற்றனர்.