நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி - மாநகராட்சி ஆணையாளர், மேயருக்கு பாசி மணிமாலை அணிவிப்பு - coimbatore district news
கோயம்புத்தூர் மாநகராட்சி துடியலூர் பகுதியில் உள்ள புதுமுத்து நகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும் சிரமப்படுவதாக சில நாட்களுக்கு முன் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் நரிக்குறவர் சமூக மக்களுடன் வந்து மனு அளித்து இருந்தார்.
அப்புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று குறைகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து தெருவிளக்கு மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்து தர உத்தரவிட்டார். அதன் பின்னர் உத்தரவின் பேரில் நேற்று அப்பகுதி மக்களுக்கு தெருவிளக்கு பொது குடிநீர் குழாய் அமைத்து தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 30 ஆண்டுகளாக அனுபவித்து வந்த கஷ்டத்திற்கு தீர்வு கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்த் குமாரை நேரில் சந்தித்து அவர்கள் கையால் செய்யப்பட்ட பாசி மணிமாலையை அன்பளிப்பாக அணிவித்து நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், சமூக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.