‘வருமான வரித்துறைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்! - minister senthil balaji in kodai vizha function
கோயம்புத்தூர்:கல்குவாரிக்கும் கரூர் காரர்களுக்கும் என்ன சம்பந்தம், வருமான வரித்துறையினருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி வால்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் வனத்துறை சார்பில் புலி, சிறுத்தை மற்றும் வன விலங்குகளின் உருவ பொம்மைகள் இடம்பெற்றிருந்தன. இது மட்டுமின்றி தோட்டக்கலை, மலர் கண்காட்சி, பரதநாட்டியம், மிருதங்கம் வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்தும் பல்வேறு துறை சார்பில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இன்று கோடை விழாவின் நிறை விழாவையொட்டி மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் பங்குபெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சீட்டுகள் வழங்கி உதவி தொகை வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “வால்பாறையில் இனி வருடம் தோறும் கோடை விழா நடத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்கள் தமிழ்நாடு மக்களுக்கு நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்குவாரிகளில் எடுக்கப்படும் கனிம வளங்கள் தினம்தோறும் 5 ஆயிரம் டாரஸ் லாரிகள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு கரூரை சேர்ந்த நபர்கள், வண்டி ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் வசூலிப்பதாக தகவல் வெளியானது என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கல்குவாரிக்கும் கரூரைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம், வருமான வரித்துறைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்” என்று காட்டமாக பதில் அளித்தார். மேலும், ஆதாரம் இருந்தால் விவசாயிகள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வீட்டில் வந்து சந்தித்துப் பேசலாம், அப்போது குற்றங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செய்தியாளர்கள் தேவையற்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும்” என பேசியாவாரு தனது காரில் ஏறிச் சென்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகையை ஒட்டி திமுக கட்சியின் கலர் கொண்ட சேலைகள் உடுத்திய பெண்களை வரவேற்புக்கு அழைத்துச் சென்றனர். இதில் அப்பெண்களுக்கு இலவசமாக சேலை மற்றும் உணவு உட்பட 200 ரூபாய் பணமும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:‘செந்தில் பாலாஜி வாங்கும் 10 ரூபாயில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு’ - சிவி சண்முகம்