உயர்கல்வி குறித்து ஆலோசனை: ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் - உயர்கல்வி குறித்து ஆலோசனை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடம், குழந்தைகள் பூங்கா, பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் பூங்காவை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். வரும் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்க வேண்டும். அதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
12ம் வகுப்புக்குப் பிறகு, மாணவர்கள் படிக்க வேண்டிய உயர்கல்வி குறித்து தங்களது பள்ளி ஆசிரியர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதுகுறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வருமானத்தால் அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி!