குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள்; ஆதனூர் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்.. - road damage
Published : Jan 10, 2024, 5:48 PM IST
திருவண்ணாமலை: ஆதனூர் கிராமத்தில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சாலைகளில் நாற்று நட்டு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை ஆற்காடு நெடுஞ்சாலையில் இருந்து ஆதனூர் கிராமம் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்திற்குச் செல்லும் இரண்டு கிலோ மீட்டர் சாலையானது முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. சாலை சீரமைப்புகள் நடைபெற்று ஆறு மாதமே ஆன நிலையில் சாலையின் அதிகப்படியான பகுதிகள் குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வருகிறது. இதனால் ஆதனூர் கிராமத்திலிருந்து பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனை மற்றும் வேலைக்காக வெளியூர் செல்லும் கிராம மக்கள் என அனைவரும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருவதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ஆதனூர் கிராம மக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் ஒன்று கூடி குண்டும் குழியுமாக உள்ள ஆதனூர் கிராம சாலையில் நாற்று நட்டு கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.