வைரல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்! - பன்னிரெண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்
சென்னை: நீலாங்கரையில் இன்று (ஜூன் 17) நடந்த நிகழ்ச்சியில், கடந்த 2022 - 2023ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் 234 தொகுதிகளில் இருந்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ - மாணவிகள் பங்கேற்று இருந்தனர். இதில் முதல் இடம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்தார். மாணவியின் தாயாரை வைத்தே நெக்லஸை அணிவிக்கச் செய்து விஜய் பார்த்து மகிழ்ந்தார். மேலும் பரிசு பெற்ற ஒவ்வொருவரின் குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் மாணவ - மாணவிகளுக்கு அறிவுரைகளும் வழங்கினார்.