"விஜய்ணா நேர்ல ரொம்ப அழகா இருந்தாங்க" - உற்சாகமடைந்த மாணவர்கள் - மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்
சென்னை: நீலாங்கரையில் இன்று (ஜூன் 17) நடந்த நிகழ்ச்சியில், கடந்த 2022 - 2023ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் குறித்து கடலூர் மாணவர் கூறுகையில், “தளபதி விஜய் செய்தது ரொம்ப பெரிய விஷயம். எல்லா தொகுதியில் இருக்கின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். அதை அவர் எளிதாக செய்து விட்டார். வாழ்க்கையில் லட்சியம் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் என தெரிவித்ததாக” கூறினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சக்தி பவானி, “நான் விஜய் அண்ணாவை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும். மேலும் நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்” எனத் தெரிவித்தார். மற்றொரு மாணவி கூறுகையில், “சாதாரணமான நபர் போல பேசினார். நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி தெரிவித்து சாப்பிட்டு விட்டு போகும்படி கூறினார். இது ஒரு கனவு போல உள்ளது. பணம் வாங்கி பெற்றோர்கள் ஓட்டு போடக்கூடாது. அடுத்த தலைமுறை நீங்கள் தான் திருத்த வேண்டும் என்றார்” எனத் தெரிவித்தார்.