கல்வி விழிப்புணர்வு நிகழ்வில் நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சு!
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமககுளம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை சகஸ்ரா கல்வி குழுமம் சார்பில், ‘ஐயம் எ சேம்பியன்’ எனும் தலைப்பில், கல்லூரி மாணவர்களுக்கு, கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகரும், சிறந்த கல்விச் சேவைக்கான தேசிய விருது பெற்ற முனைவர் தாமு சிறப்புரையாற்றினார். அதில் அவர், நடிகர்கள் யாரும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? என்பது பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். நானும் இங்கு ஒரு நடிகனாக வரவில்லை. மாறாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிஷ்யனாக வந்துள்ளேன் என்று ஆரம்பித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொள்வது அவசியம். மேலும் அவர்கள் உங்களுக்காக பலவிதமான தியாகங்களை செய்கிறார்கள் என உருக்கமாக பேசிய போது, பெரும்பாலான மாணவ மாணவியர்கள் மட்டுமின்றி, மேடையில் அம்ர்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள், ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் என பலதரப்பினரும், மனமிறங்கி தங்களையும் மறந்த நிலையில் அழுதனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிய்து மனதை உருக்கியது என்றால் அது மிகையல்ல. இந்நிகழ்வில், நூற்றுக்கணக்காண மாணவ மாணவியர்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.