வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா! - ஆனி உத்திர திருமஞ்சனம்
வேலூர்:சிவத் தலங்களில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனி திருமஞ்சன விழா மிகவும் புகழ்பெற்றது. நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு விழாக்களில் ஒன்று மார்கழி திருவாதிரை மற்றொன்று ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் மட்டுமே நடராஜர் வீதி உலா வருவார்.
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஜூன் 26) ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் நடராஜர் - சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மலர் மாலைகள், வில்வ இலைமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு திருஆபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழுவின் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அறநிலையத்துறை நிர்வாகிகள் மேற்கொண்டு இருந்தனர்.