Aanai aanai alagar aanai: குளித்து கும்மாளம் போடும் அழகர் கோயில் யானை - அழகர் கோயில் யானை பெயர்
மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அழகர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் ‘சுந்தரவல்லி தாயார்’ என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மாந்தோப்பு பகுதியில், நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்கிறது.
தினந்தோறும் சத்து மிகுந்த உணவுகள் சுந்தரவல்லி தாயார் யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே கோயில் பாகன்கள், யானையை மிக கவனமாக பேணிப் பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் அழகர் கோயில் மலையின் மேலே அமைந்துள்ள நூபுர கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் நிரப்பப்படுகிறது.
பின்னர் அந்தத் தண்ணீர் தொட்டியில் மிகுந்த உற்சாகத்தோடும், ஆனந்த பிளிறலோடும் சுந்தரவல்லி தாயார் யானை பாகன்களோடு கொஞ்சி விளையாடி வருகிறது. அப்போது நீச்சல் அடித்தும், தும்பிக்கையால் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழ்ந்து வருகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற சித்திரை மாதம் லட்சக்கணக்காணோர் பங்குபெறும் கள்ளழகர் திருவிழா நடைபெற உள்ளது.