Aadi pooram festival: ஐந்து அம்மன்கள் மகாமக குளத்தில் சங்கமம்; கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் - கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள்
தஞ்சாவூர்:ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் (kumbakonam mahamaham Festival) மேற்கு கரையில் இன்று (ஜூலை 22) நான்கு திருக்கோயில்களில் இருந்து உற்சவர் ஆடிப்பூர அம்மன்களுடன் சாமுண்டீஸ்வரியும் ஒருசேர எழுந்தருளினார். பின்னர், அங்குள்ள படித்துறையில் நான்கு அஸ்திரதேவர்களுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆடிப்பூர தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றக்கணக்கானோர் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனிதநீராடியும், கரையில் எழுந்தருளிய ஆடிப்பூர அம்மன்கள் மற்றும் சாமுண்டீஸ்வரியையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
பிரசித்திபெற்ற கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் மேற்கு கரைக்கு, காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய நான்கு கோயில்களில் இருந்து ஆடிப்பூர அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் ஒருசேர சாமுண்டீஸ்வரியுடன் எழுந்தருளினர். தொடர்ந்து கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவர்களை வரிசையாக குளத்தில் படித்துறையில் எழுந்தருளச் செய்து ஒரே சமயத்தில், அவைகளுக்கு திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பிறகு, நான்கு அஸ்திர தேவர்களையும் சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்தபடி, திருக்குளத்தில் இறங்கி, மும்முறை முங்கி எழுந்து 'ஆடிப்பூரத்தீர்த்தவாரி' (Aadi pooram festival) சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் நீராடியும், கரையில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட நான்கு கோயிலில் இருந்து வருகை தந்த ஆடிப்பூர அம்மன்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.