திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு உற்சவம் - Tiruchendur Aadi Krithigai news
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி, பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அறுபடைக் கோயில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4-00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும் விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பூ காவடி எடுத்தும், கடலில் புனித நீராடியும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மேலும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று(அகஸ்ட்9) மாலையில் 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.