குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடி கொடை விழா கொண்டாட்டம் - தீச்சட்டி
தூத்துக்குடி: இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடி மாதம் நடைபெறும் கோயில் கொடை விழா பிரசித்திபெற்றது ஆகும். ஆடி கொடை விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, கும்பம் மேளதாளத்துடன் வீதி உலா புறப்பட்டு முக்கிய வீதிகளில் வந்தடைந்தது. பின்னர் நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பட்டை, வில்லிசை மற்றும் கனியான் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க, அம்மன் கும்பம் சுமந்து கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து மகாமண்டபத்தில் ஆடியபடி வந்தனர். பின்னர் கும்பம் வீதி உலா வந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தீச்சட்டி சுமந்து, அலகு குத்தி ஊர்வலமாகச் சென்று பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். கோயில் வளாகத்தில் திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் தலைமையில் நடைபெற்றது.