Aadi Krithigai: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று (ஆகஸ்ட் 09) ஆடி கிருத்திகையை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மலையடிவாரம் பாத விநாயகர் கோயில், படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையங்களிலும், முடிகாணிக்கை செலுத்தும் இடங்கள் என பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் ஆடிகிருத்திகையை முன்னிட்டு தீபங்கள் ஏற்றியும், படிபாதைகளில் உள்ள படிகளில் சூடம் ஏற்றி கொண்டே மலைக்கோயிலுக்கு சென்றும், காவடிகள் எடுத்தும் மலைக்கோயிலுக்கு சென்றனர்.
அதேபோல் பொது தரிசனம், சிறப்பு கட்டண வழிகளிலும் ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு குடிநீர், நிழல் பந்தல்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.